உதகை மலைப்பாதையில் சென்ற சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் உதகைக்கு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை, கூடலூர் செல்லும் மலைப்பாதைகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசியிலிருந்து வந்த சுற்றுலா பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிறுவன், பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் வடு மறைவதற்குள், சொகுசு பேருந்து ஒன்று மலைப்பாதையில் பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து நீலகிரிக்கு 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடன் சுற்றுலா பேருந்து ஒன்று வந்துள்ளது. இன்று அதிகாலை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் வந்த போது, பேருந்தின் பின் பக்க சக்கரத்தில் திடீரென தீ பற்றி உள்ளது. இதனை பேருந்திற்கு பின்னே வந்த வேறு ஒரு வாகனத்தில் வந்தவர்கள் பார்த்து சுற்றுலா பேருந்து ஓட்டுநருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் அவசர அவசரமாக இறக்கி விடபட்ட நிலையில் பேருந்தின் உள்பகுதியிலும், தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. பேருந்து முழுவதும் தீ பற்றிய நிலையில், உடனடியாக இது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பேருந்து முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
No comments:
Post a Comment