நாம் உண்ணும் மீனில் ‘ஒமேகா 3’ சத்து நிறைந்திருக்கிறது. எனவே மீன் உணவை சைவ உணவில் சேர்ப்பதன் மூலம் அதனை அதிகமான மக்கள் சாப்பிட முடியும் என்று தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சாகர் பயணத் திட்டம் தொடக்கம். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் விழா காரைக்கால் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், “மீனவ சகோதரர்களுக்கு என்னென்ன உதவிகளை செய்ய முடியுமா அதனை மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செய்து கொண்டு வருகின்றன. மீனவர் சமுதாய மக்களுக்கு உதவிகள் தேவை என்று அரசாங்கம் முடிவு செய்து அது தொடர்பான கோப்புகள் என்னிடம் வந்தால் அதை உடனடியாக ஒப்புதல் அளித்து வருகிறேன்.
நாம் உண்ணும் மீனில் ‘ஒமேகா 3’ சத்து நிறைந்திருக்கிறது. எனவே, மீன் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு வராது. மீன் உணவை சைவ உணவில் சேர்ப்பதன் மூலம் அதனை அதிகமான மக்கள் சாப்பிட முடியும். எப்படி முட்டையில் அதிகமான புரோட்டின் இருந்ததால் அதை அசைவத்தில் இருந்து சைவமாக மாற்றி இருந்தார்களோ அதைப்போல மீனையும் மாற்ற வேண்டும். இதனை ஆளுநராக இல்லாமல் மருத்துவராகவும் கூறுகிறேன்.
மீனை சாப்பிட ஆரம்பித்தால் எளிதில் அதனை விட்டுவிட முடியாது. மீனவர்களின் பதப்படுத்தும் முறை திறமையானது. மீனை உணவாக எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் அதனை கருவாடாக மாற்றி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த கலையை உலகிற்கு மீனவர் சமுதாயம் தான் சொல்லிக்கொடுத்து இருக்கிறது.
மத்திய அரசு மீனவர் சமுதாயத்தை ‘ஜிபிஎஸ் சிஸ்டம்’ முறைகளின் மூலம் பாதுகாக்கிறது. ஐதராபாத் மீன் வளத்துறை அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்ற போது, ஆராய்ச்சி விண்வெளி நிறுவனங்களோடும், பாதுகாப்பு நிறுவனங்களோடும் இணைந்து மீனவச் சகோதரர்களுக்கு சுனாமி, புயல், கடல் சீற்றம் போன்ற பேரிடர்கள் நிகழ்வதை முன்கூட்டியே தெரிந்து அவர்களுக்கு ‘ஸ்மார்ட் மொபைல் போன்’ மூலம் தெரியப்படுத்த ஆலோசனை சொன்னார்கள். அதற்கு, அத்தனை மீனவர் சகோதரர்களிடமும் ஸ்மார்ட் போன் இருக்குமா?” என்று நான் கேட்டேன்.
அவர்கள் “தெரியாது” என பதிலளிக்க, “இந்த தொழில்நுட்பத்தை நீங்கள் சிறப்பாக வடிவமைத்து கொடுத்தால் புதுச்சேரியில் மீனவ சகோதரர்களின் பாதுகாப்பிற்காக அவர்களுக்கு ஸ்மார்ட் போன் தருவதற்கான அத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று சொன்னேன். ஏனென்றால், இது மீனவர்களின் பாதுகாப்புக்கு மிகவும் உகந்தது” என்றார்.
No comments:
Post a Comment