'நாளைய முதல்வர் கார்த்தி சிதம்பரம்' பரபரப்பை கிளப்பிய போஸ்டர் - MAKKAL NERAM

Breaking

Friday, November 17, 2023

'நாளைய முதல்வர் கார்த்தி சிதம்பரம்' பரபரப்பை கிளப்பிய போஸ்டர்


 'நாளைய முதல்வர் கார்த்தி சிதம்பரம்' என அவருடைய ஆதரவாளர்கள் சென்னையில் ஒட்டியுள்ள  போஸ்டரால் திமுக கூட்டணிக்குள்  சர்ச்சை எழுந்துள்ளது.


சிவகங்கை தொகுதியின் எம்.பியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான  ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவருடைய பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. தொண்டர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய கார்த்தி,  அவர்கள் மத்தியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தனக்கு விருப்பம் இருப்பதாக பேசினார்.


இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள், சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் ஏழை. எளியோருக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கினர். அப்போது அந்த பகுதியில், 'நாளைய முதல்வர் கார்த்தி சிதம்பரம்' என போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். அதிலும் உதயநிதியின் தொகுதியான திருவல்லிக்கேணி  சேப்பாக்கம் பகுதியில்தான் இந்த போஸ்டர்கள் அதிகமான அளவில் ஒட்டப்பட்டிருந்தன.


இது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பல முறை திமுக - காங்கிரஸ் இடையே லேசான உரசல் சம்பவம் நடந்துள்ளது. இதை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசி சரி செய்துள்ளனர். அதுபோல்  காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே சில நேரம் ட்விட்டுகளை கார்த்தி சிதம்பரம் வெளியிட்டிருந்தார். இவரது செயலால்  ஒரு முறை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கார்த்தி சிதம்பரத்தை நேருக்கு நேர் பார்த்த போதுகூட அவர் பேசவில்லை, கார்த்தி கை கொடுத்த போதுகூட ராகுல் கண்டு கொள்ளவே இல்லை. 


இந்த நிலையில் கூட்டணிக் கட்சியான திமுக அடுத்த 5 ஆண்டுகளும் ஆட்சிக்கு வர முனைப்பு காட்டி தொலைநோக்கு திட்டங்களைக் கொண்டு வருகிறது. தற்போது ஸ்டாலின் முதல்வராக இருக்கும் நிலையில் அடுத்ததாக அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்கவும் முனைப்புடன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் நாளைய முதல்வர் கார்த்தி சிதம்பரம் என போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கூட்டணிக்குள் குண்டு வைக்கலாமா என காங்கிரஸ் கட்சியினரைப் பார்த்து திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment