தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் கடந்த 16, 17ம் தேதிகளில் வரலாறு காணாத அதிகனமழை பெய்ததால் இந்த மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. வீடுகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள், மேம்பாலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், போக்குவரத்தும் தடைப்பட்டது.
இந்த வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான தொழிலான உப்பளத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. உப்பளங்களில் மழை நீர் தேங்கியதால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும், உப்பளங்களில் தேக்கி வைக்கப்பட்டிருந்த உப்பு, வெள்ளத்தில் கரைந்ததால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான உப்பு வெள்ளத்தில் கரைந்துள்ளதாக உப்பள உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலித்தீன் பைகள் போட்டு மூடி வைத்திருந்த போதும், சுமார் 4 முதல் 5 நாட்களுக்கு வடியாமல் தேங்கிய மழை நீரால், இந்த சேதம் ஏற்பட்டுள்ளதாக உப்பள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், தூத்துக்குடிக்கு மாற்றாக, நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு உப்பு கொள்முதல் செய்ய சென்றுவிடுகின்றனர். இதனால் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உப்பள தொழிலாளர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த வாரம் தூத்துக்குடிக்கு மழை வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மத்திய நிதியமைச்சரிடமும் இது தொடர்பான கோரிக்கை மனுவை உப்பள உரிமையாளர்கள் மற்றும் உப்பள தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் வழங்கியுள்ளனர். உப்பு உற்பத்தியாளர்களின் கடன் தவணை, வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
No comments:
Post a Comment