உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று அதிகாலை அறிவித்திருந்தது. அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்து வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போக்குவரத்தை நெரிசலை சரிசெய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment