பிரதமர் மோடியை கேலி செய்த 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட்..... மாலத்தீவு அரசு அதிரடி..... - MAKKAL NERAM

Breaking

Sunday, January 7, 2024

பிரதமர் மோடியை கேலி செய்த 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட்..... மாலத்தீவு அரசு அதிரடி.....

 


சமீபத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், பின்னர் ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார்.


இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், "லட்சத்தீவு மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன். அந்த மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்'' என தெரிவித்து இருந்தார்.


பிரதமர் மோடியின் இந்த பதிவு தொடர்பாக மாலத்தீவு அரசின் மந்திரிகள் சிலர் கேலி செய்யும் வகையிலும், இந்தியர்கள் மீது இனவெறியை காட்டும் வகையிலும் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டிருந்தனர். இதற்கு இந்தியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மாலத்திவுக்கான விமான டிக்கெட் முன்பதிவுகளை ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ரத்து செய்ததாகவும் தகவல் வெளியானது.


இதனிடையே மந்திரிகள் கூறியது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாலத்தீவு அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்து விமர்சன பதிவுகளை வெளியிட்ட மரியம் ஷுயினா, மால்ஷா ஷரீப் மற்றும் ஹாசன் சிகான் ஆகிய 3 மந்திரிகளை சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment