• Breaking News

    பசியால் சாலையில் சுருண்டு விழுந்த வட மாநில தொழிலாளர்கள்.... கோவை மாநகராட்சி செய்த பேருதவி.....

     

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஏராளமான தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காக வட மாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்றனர். இருப்பினும் சிலருக்கு போதிய அனுபவம் இல்லாததாலும், அடிப்படை அடையாள அட்டைகள் இல்லாததாலும் வேலை கிடைக்காமல் சொந்த ஊருக்கே திரும்பும் நிலை உருவாகிறது. வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சொந்த ஊரிலிருந்து கிளம்பி இங்கு வந்த சிலர், வேலையும் கிடைக்காமல் ஊருக்கு திரும்பவும் செல்ல முடியாமல் தவிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.இதனால் இவர்கள் கோவையில் உள்ள சாலைகளில் தஞ்சம் புகுவது வாடிக்கை. 

    அவ்வாறு சாலையில் ஆதரவற்று இருக்கும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி சார்பில் ஆதரவற்றோர் தங்கும் மையம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவிநாசி சாலை மேம்பாலம் அருகில் இரண்டு இளைஞர்கள் மிகவும் உடல் சோர்வான நிலையில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது அவர்கள் வடமாநிலத்தில் இருந்து கோவைக்கு வேலை தேடி வந்ததும், ஆவணங்கள் இல்லாததால் வேலை கிடைக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. ஒரு வார காலத்திற்கும் மேலாக வேலையில்லாததால் உணவு கிடைக்காமல் சாலையோரத்தில் பசி மயக்கத்தில் படுத்து இருந்ததாக இருவரும் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அவர்கள் இருவரையும் மீட்ட போலீஸார் மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் மையத்தில் தங்க வைத்தனர். ஒரு வார கால ஓய்வு மற்றும் கவுன்சிலிங் ஆகியவற்றை அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் வழங்கினர். 

    அப்போது ஒருவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் (42) என்பதும், மற்றொருவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த குல்தீப் (43) என்பதும் தெரியவந்தது. இருவரும் உடல்நிலை தேறியதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி சார்பில் இருவருக்கும் ரயில் டிக்கெட் எடுத்து கொடுக்கப்பட்டு சொந்த ஊருக்கு கடந்த 19ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்கள் சொந்த ஊருக்கு கடந்த 23ம் தேதி திரும்பி சென்றதைத் தொடர்ந்து, இன்று கோவையில் தங்களுக்கு ஆதரவளித்த மாநகராட்சி நிர்வாகத்திற்கும், மலரும் விழிகள் அமைப்பிற்கும் போன் மூலம் அழைத்து நன்றி தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments