கடலூர்: பட்டை நாமத்துடன் கூட்டத்திற்கு வந்து பட்டையை கிளப்பிய கவுன்சிலர் - MAKKAL NERAM

Breaking

Friday, June 28, 2024

கடலூர்: பட்டை நாமத்துடன் கூட்டத்திற்கு வந்து பட்டையை கிளப்பிய கவுன்சிலர்

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த நல்லூர் ஒன்றியத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியில் உள்ளனர். இதில் திமுகவினர் 7 பேரும், அதிமுகவை சேர்ந்த 7 பேரும், சுயேச்சை கவுன்சிலர்கள் 5 பேரும், பாமகவை சேர்ந்த 2 பேரும் கவுன்சிலர்களாக உள்ளனர். இதில் வரமனூர், கோ.கொத்தனூர், திருப்பெயர் ஆகிய கிராமங்கள் உள்ளடக்கிய 7வது வார்டு கவுன்சிலராக சிவகுமார் என்பவர் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றிருந்தார்.கடந்த 2019ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து தங்களது கிராமத்திற்கு எவ்வித நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுவதில்லை என சிவகுமார் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும், அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு வருகை தந்த சிவகுமார், நெற்றியில் நாமம் போட்டும், கையில் காலி பானையும் எடுத்து வந்து கூட்டத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தங்கள் கிராமத்திற்கு ஊராட்சி ஒன்றிய நிதியில் ஒரு பைசா கூட வரவில்லை எனக் கூறியதோடு, காலிப்பானையையும் காட்டி அவர் தலைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படவில்லை எனவும், ஒதுக்கப்பட்டவுடன் உரிய பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தலைவர் செல்வி விளக்கம் அளித்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்து சிவகுமாரும் பிற கவுன்சிலர்களும் அடுத்தடுத்து முழக்கங்களை எழுப்பியதால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment