• Breaking News

    அம்பானி வீட்டு கல்யாண செலவை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிய ஜியோ

     

    தொலைத்தொடர்பு சேவையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ் ஜியோ. 4ஜி வருகையுடன் அறிமுகமான ஜியோ, இந்தியாவின் டிஜிட்டல் கனவுகளை அடியோடு மாற்றியமைத்தது. ஆரம்பித்த சூட்டில், நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் அசுரப் பாய்ச்சல் எடுத்தது.இந்த ஜியோ நிறுவனம் தனது தற்போதுள்ள கட்டண விகிதங்களை அதிரடியாக இன்று உயர்த்தி அறிவித்தது. இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். 

    ரிலையன்ஸ் ஜியோவின் இந்த முடிவு நெட்டிசன்களுக்கு ஏமாற்றத்தையும் தந்துள்ளது. புதிய திட்டங்கள் ஜூலை 3 முதலே அமலுக்கு வரும் என்று ஜியோ அறிவித்தபோதும் நெட்டிசன்கள் தங்களது புலம்பல் மற்றும் கலாய்ப்புகளை இன்றே தொடங்கி விட்டனர்.அதில் பலரும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய பிரமாண்ட விழாக்களை கேலியோடு கேள்வி எழுப்பி வருகின்றனர். ’ரிலையன்ஸ் ஜியோ தனது கட்டணத் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. அம்பானி வீட்டு திருமண செலவுகளை யாரோ ஒருவர் ஏற்றாக வேண்டுமே" என்று நெட்டிசன்கள் பலரும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    இது உட்பட ஜியோ கட்டண திட்டத்தையும் அம்பானி வீட்டு திருமண செலவையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர். ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை ஒட்டி அம்பானி குடும்பத்தினர் உலகே திரும்பி பார்க்கும் வகையில் பிரமாண்ட விழாக்களை நடத்தி வருகின்றனர். கோடிகளை கொட்டி வரவழைக்கப்பட்ட சர்வதேச இசைப் பாடகர்கள், பாலிவுட் பிரபலங்களின் நடனம், விருந்தினர்களுக்கான விமான மற்றும் கப்பல் வசதிகள், பல கட்டங்களாக நடைபெறும் திருமணத்துக்கு முந்தைய விழாக்கள் என அம்பானி வீட்டு கல்யாணம் அனைவரையும் வாய்ப்பிளக்கச் செய்து வருகிறது.

    No comments