• Breaking News

    கோவை: போலீஸ் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இருந்த சந்தன மரத்தை வெட்டிக்கடத்திய மர்ம நபர்கள்

     

    கோவை மாநகராட்சிக்குட்பட்ட பந்தய சாலை பகுதி, ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றின் அருகே அமைந்துள்ளது. இங்கு கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம், கோவை மண்டல துணை காவல்துறை தலைவர் அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம், வருமான வரித்துறை அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளது. இதன் அருகிலேயே ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றின் தளங்கள் உள்ள ரெட் ஹில்ஸ் பகுதியும் அமைந்துள்ளது.

    ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ள இப்பகுதியில் எப்போதும் காவல்துறை நடமாட்டம் இருக்கும். இப்பகுதியில் 3 கல்லூரிகள் மற்றும் ஏராளமான நிறுவனங்களின் தலைமையகங்கள், கடைகள் ஆகியவையும் அமைந்துள்ளது. மேலும் காலை, மாலை வேளைகளில் இங்குள்ள நடைபாதையில் ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இங்குள்ள வருமான வரித்துறை அலுவலகம் எதிரே உள்ள நடைபாதையில் சுமார் 20 ஆண்டுகளான சந்தனமரம் ஒன்று வளர்ந்திருந்தது. இன்று காலை அவ்வழியே சென்றவர்கள், மரம் வெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பந்தயசாலை காவல் நிலைய போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். 

    தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, மரத்தை வெட்டிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக்கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ள பகுதியில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments