சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாப பலி
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் குமார் என்பவர் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாதிரியாராக இருக்கிறார். இவர் அருகில் உள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகள் தங்கி பள்ளிக்கு செல்வதற்காக விடுதி ஒன்று நடத்தி வருகிறார். விடுதியில் மொத்தம் 97 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிக்கு படிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவ நாளன்று ஒருவர் வீட்டு விசேஷத்தில் மீதமான சிக்கன் பிரியாணி மற்றும் சமோசாவை விடுதியில் தங்கிப் படிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்குமாறு பாதிரியாரிடம் கொடுத்துள்ளார்.
அதை போல் அவரும் குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் சமோசாவை சாப்பிட கொடுத்துள்ளார். அதன்பின் குழந்தைகள் தூங்க சென்றனர். அப்போது 1 ம் வகுப்பு படிக்கும் ஜோஸ்வா (6) என்ற குழந்தைக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிரியார் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதைத்தொடர்ந்து விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பதட்டமடைந்த பாதிரியார் இது குறித்து அவர்களது பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த பெற்றோர்கள் விடுதிக்கு வந்து குழந்தைகளை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
அதன்பின் பெற்றோர்கள் குழந்தைகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில் ஜென்மேலி பாவனி(8), சத்தா(6) ஆகிய பெண் குழந்தைகள் இரண்டு பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து பாதிரியாரை கைது செய்ததுடன் அவரிடம் இச்சம்பவத்தை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சந்திரபாபு நாயுடு விடுதியில் தங்கி இருந்து உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் அனுமதியின்றி நடத்தப்படும் ஆதரவற்ற இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்றவற்றை உடனடியாக மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments