• Breaking News

    சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, எந்த கோயிலையும் பூட்டக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை


     மதுரை மாவட்டம் உத்தபுரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில்,  "உத்தபுரத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோயிலைத் திறந்து, நாள்தோறும் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என அவர் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி "இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோயிலைப் பூட்டியதால், சாமிக்கு பூஜைகள் செய்ய முடியவில்லை.

     கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம். குற்ற வழக்கில் சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது.இந்த வழக்கில் சாமிக்கு தேவையான பூஜை உள்ளிட்ட தேவைகள் கிடைக்கப் பெறவில்லை. கோயிலை காலவரையின்றி மூடி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் வேடிக்கை பார்க்க கூடாது. இந்த வழக்கில் யாருக்கு உரிமை உள்ளதோ, அவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.உத்தபுரம் கோயிலை ஒரு சமுதாயத்தினர் மூடியுள்ளனர், இதில் அதிகாரிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. கோயிலை மூடியதாக கூறப்படும், அந்த சமுதாயத்தினர் கோயிலைத் திறக்க வேண்டும் என ஏன் நீதிமன்றம் வர வேண்டும்? அவர்கள் கோயிலை திறந்தாள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்சத்தால் நீதிமன்றம் வந்துள்ளனர். கோயில் நிலை குறித்த புகைப்படத்தை மனுதாரர் சமர்பித்திருந்தார்.அதில் கோயிலானது மோசமான நிலையில் இருப்பது தெரிந்தது. இந்த வழக்கில் கோயிலைத் திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தர விடப்படுகிறது.

     இதில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், சம்பந்த பட்டவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, எந்த கோயிலையும் பூட்டக் கூடாது" என நீதிபதி உத்தரவிட்டார்.

    No comments