அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முடிவெடுத்தபோதே நான் எனது தொழில் நிறுவனங்களின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டேன்” என்று தனக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை குறித்து விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார்.கடந்த 14, 15 தேதிகளில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனும் விசிக துணை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இதுகுறித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில், “அரசியல் பொது வாழ்வில் ஈடுபட முடிவெடுத்தபோதே நான் எனது தொழில் நிறுவனங்களின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டேன். தற்போது நான் வருவாய் ஈட்டக்கூடிய எந்த தொழிலிலோ, அதுசார்ந்த பொறுப்பிலோ இல்லை. அமலாக்கத் துறை சோதனை என்பது எனக்கானது அல்ல, அமலாக்கத் துறையின் சோதனை ஆணை எனது பெயரில் இல்லை.அரசின் விசாரணை அமைப்புகளில் என்மீது எந்த புகாரும், வழக்குகளும் இல்லை. எக்காலத்திலும் சட்டத்துக்கு எதிரான எந்த பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை.
இச்சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் என் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் சட்டரீதியாக அளிக்கப்பட்டு சோதனை முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனை குறித்து எனக்கு எதிரான அவதூறான கட்டுக்கதைகள் பரப்பப்படுகிறது. இதுபோன்ற எதிர்மறை கருத்துகள் எனது அரசியல் சிந்தனைக்கு மேலும் உத்வேகம் அளிக்குமே தவிர, ஒருபோதும் எனது அரசியல் பயணத்துக்குத் தடையாக மாறாது,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment