நாகை: காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் இணைந்து, நாகை மாவட்டத் தோட்டக்கலைத்துறை உதவியுடன் கீழையூர் வட்டத்தைச் சார்ந்த 6 கிராமங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பட்டியலின விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, வேளாண் இடுபொருட்கள் விநியோகத்துடன் ஒரு நாள் பயிற்சி முகாமானது கீழ்வேளூர் வட்டம் காமேஸ்வரம் கிராமத்தில் நடைபெற்றது.இப்பயிற்சி முகாமினைத் துவக்கி வைத்து துவக்கவுரையாற்றிய காரைக்கால் வேளாண் கல்லூரியின் மண்ணியல் துறை பேராசிரியர் R.சங்கர், காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், உயர்ரக தொழில்நுட்பங்களை உபயோகித்து மகசூலை அதிகரிக்க வேண்டும் என்றும், சரியானத ருணத்தில் உரமிட்டு, உயிர் உரங்களை உபயோகித்து,உரச்செலவை கட்டுப்படுத்த வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்டார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாகை மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் S.பரிமேலழகன், இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளிடம் மிளகாய் மற்றும் கத்திரி சாகுபடி குறித்தும், அதன் திட்டங்கள் குறித்தும், இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.
வாழ்த்துரை வழங்கிய உதவி தோட்டக்கலைத்துறை இயக்குனர் A.முகமது சாதிக், இப்பயிற்சி முகாமில் வழங்கப்படும் இடுபொருட்களை வீணாக்காமல் முறையாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும், அவ்வாறுஅதிக மகசூல் ஈட்டும் மூன்று விவசாயிகளை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
இப்பயிற்சி முகாமினை ஏற்பாடு செய்த இத்திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் T.இராமநாதன், காய்கறி சாகுபடியில், குறிப்பாக மிளகாய் மற்றும் கத்திரி சாகுபடியில் மகசூல் அதிகரிப்பதற்காக கொடுக்கப்படும் வேளாண் இடுபொருட்கள் மற்றும் பண்ணைக் கருவிகளின் பயன்கள், அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விரிவான விளக்கமளித்தார்.
மிளகாய் மற்றும் கத்திரியில், உயிரியல் தூண்டியின் பயன்கள், பயன்படுத்தும் முறைகள் பற்றி விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை பேராசிரியர் T.இராமநாதன், மிளகாய் மற்றும் கத்திரியின் நாற்றங்கால் முறைகள் குறித்து தோட்டக்கலைத் துறைபேராசிரியர் V.சுந்தரம், காய்கறி சாகுபடியின் போது மண்வளம்,மேலாண்மை குறித்து மண்ணியல் துறை பேராசிரியர் R.சங்கர்,மிளகாய் மற்றும் கத்திரியில் வரும் பூச்சிகள் குறித்தும் அதன் மேலாண்மை குறித்தும்,பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் K.குமார், மிளகாய் மற்றும் கத்திரியில் தோன்றும் நோய்கள் மற்றும் பூஞ்சைகள், அதன் மேலாண்மைக் குறித்தும் நோயியல் துறை உதவி பேராசிரியர் சண்முக பிரியா ஆகியோர் எடுத்துரைத்தனர் .
இறுதியாக, கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் தலா 16 வகைகள் வேளாண் இடுபொருட்களாக மிளகாய் ,கத்திரி நாற்றுகள், திட மற்றும் திரவ ஹுமிக் ஆசிட், பஞ்சகாவ்யா, சூடோமோனாஸ் திரவம், மீன் அமினோ அமிலம், மண்புழு உரம், நானோயூரியா, கடற்பாசி உரம், வேப்பம்புண்ணாக்கு, PGPR மாத்திரை மற்றும் பண்ணைக் கருவிகளான ஒற்றை சக்கைத் தள்ளுவண்டி,மண்வெட்டி, களைவெட்டி, அலுமினியக்கூடை ஆகியவை விலையில்லாமல். வழங்கப்பட்டன.
No comments