நாகையில் மீன்பிடி தடைக்காலத்திற்கு பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 590 விசைப்படகுகள் ஆழ் கடலில் மீன் பிடிக்க இன்று முதல் புறப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Monday, June 16, 2025

நாகையில் மீன்பிடி தடைக்காலத்திற்கு பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 590 விசைப்படகுகள் ஆழ் கடலில் மீன் பிடிக்க இன்று முதல் புறப்பட்டது


மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 14ம் தேதி நள்ளிரவு வரை மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி நடப்பு ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி தடைக்காலம் தொடங்கியது. இதையடுத்த கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தியுள்ள விசைப்படகுகளை ஆய்வு செய்தனர். இதில் விசைப்படகுகளில் சீனஇஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதா? படகுகளின் நீளம், அகலம் சரியாக உள்ளதா? விசைப்படகுகளில் சரியான முறையில் குறிப்பிட்ட அளவில் விசைப்படகு எண் எழுதப்பட்டுள்ளதா? பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்தனர். 

இதை தொடர்ந்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் மீன்வளத்துறையினர் அறிவுரையின் படி பெயிண்ட் அடிப்பது, பழுதுநீக்கம் செய்வது என்பது உள்ளிட்ட அனைத்தையும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து சீர் செய்தனர். இதன்பின்னர் தங்களது மீன்பிடி வலைகள் உள்ளிட்ட அனைத்தையும் சீர் செய்து வைத்தனர். மீன்பிடி தடைக்காலம் கடந்த14ம் தேதி நள்ளிரவுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக வரும் 17ம் தேதி வரை விசைப்படகுகளை ஆழ்கடல்  செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடைவிதித்தது. எச்சரிக்கை வாபஸ் பெற்றதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இன்று அதிகாலை  590 விசைப்படகுகள் ஆழ்கடல் புறப்பட்டது. பைபர் படகுகள் 1200 மீன்பிடிக்க சென்றது.

மீன்பிடி தடைக்காலத்திற்கு பின்னர் ஆழ்கடல் செல்ல இருப்பதால் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் கிடைக்கும். அதே நேரத்தில் உரிய வருவாய் கிடைக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மீன்பிடி தடைக்காலத்திற்கு பின்னர் விசைப்படகுகள் ஆழ்கடல் செல்ல இருப்பதால் மீன்பிடி தொழிலை சார்ந்த 40 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள்.

செய்தியாளர்: ஜி.சக்கரவர்த்தி


No comments:

Post a Comment