திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கிய தளவாய் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. ஆக பணியாற்றி வந்தார். இதனிடையே, மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் பணியற்றி வந்த தந்தை , மகன் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பிரச்சினையை விசாரிக்க சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் அங்கு சென்றுள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.
முன்னதாக தந்தை, மகன்கள் சண்டையை பிரித்து மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க சண்முகவேல் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரத்தில் எஸ்.ஐ. சண்முகவேலை தங்கராஜ் வெட்டிக் கொன்றநிலையில், மற்றொரு காவலரையும் வெட்ட முயன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமறைவான தந்தை தங்கராஜ், மகன்கள் மூர்த்தி மற்றும் மணிகண்டனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் போலீசார் விரைந்து சென்று, சண்முகவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே காவல்துறை ஜீப் ஓட்டுநர் அழகுராஜாவிடம் டிசிஜி சசிமோகன் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார்.இந்நிலையில் உயிரிழந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணிப்புரிந்துவந்த சண்முகவேல் (வயது 57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் திரு. அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று (05.08.2025) இரவு 11 மணியளவில் ரோந்துப் பணியின்போது சிக்கனூத்து அருகில் தனியரின் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்சனை குறித்து தகவல் அறித்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்குச் சென்றபோது அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு எஸ்.ஐ. மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியதில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையுமடைந்தேன்.
சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment