மானாமதுரை: 6 பேர் கடத்தியதாக நாடகமாடிய பிளஸ்-2 மாணவி - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 12, 2025

மானாமதுரை: 6 பேர் கடத்தியதாக நாடகமாடிய பிளஸ்-2 மாணவி

 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் படித்துவரும் 17 வயது பிளஸ்-2 மாணவி, நேற்று காலையில் தன்னுடைய சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு வந்தார். அவரை பள்ளிக்கூடம் அருகே இறக்கிவிட்டு சகோதரர் சென்றார். ஆனால், மாணவி பள்ளிக்கு செல்லவில்லை.


இதற்கிடையில் அந்த மாணவி சிவகங்கையில் இருந்து தன்னுடைய தோழி ஒருவருக்கு போன் செய்து தன்னை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாகவும், தற்போது அவர்களிடம் இருந்து தப்பி சிவகங்கை பஸ் நிலையத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் பதறிய தோழி, இதுகுறித்து மாணவியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.


பின்னர் மாணவியை மீட்டு சிவகங்கை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். மாணவி கடத்தப்பட்டதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் மானாமதுரை போலீசார் பள்ளிக்கூடம் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.


அதில், அந்த மாணவியை அவரது சகோதரர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து பள்ளி அருகே இறக்கி விடுவதும்,. சகோதரர் சென்ற பின்னர் அந்த மாணவி அந்த வழியே வந்த ஒரு தனியார் பஸ்சில் ஏறி சென்றதும் பதிவாகி இருந்தது.இதனால் அந்த மாணவி கடத்தப்பட்டதாக நாடகமாடியதை போலீசார் உறுதி செய்தனர்.


இதைத் தொடர்ந்து அந்த மாணவியை மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். எதற்காக மாணவி அவ்வாறு கூறினார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 6 பேர் கடத்தியதாக பிளஸ்-2 மாணவி நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment