தமிழகத்தில் ஆணவக்கொலைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கவின் ஆணவக்கொலை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆணவ கொலைகள் தடுப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் ஆணவக் கொலைகள் - குற்றங்களுக்கு எதிரான சமூக நீதிக் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன.
நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது. இது பதிவு செய்யப்பட்ட கணக்கு. நிலைமை கை மீறிச் செல்கிறது. கொலைகாரனை கொண்டாடுகிற சூழல் உள்ளது. அதே சமயம் பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை முதலமைச்சர் கொண்டு வர வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment