சென்னை ஐகோர்ட்டில், மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு கோவில்களின் (ஆயிரம் ரூபாய் மேல் வருமானம் இருந்தால்) வரவு-செலவு கணக்கை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஆண்டுதோறும் வெளியிட வேண்டும். ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கோவில்களின் வரவு-செலவு கணக்கை வெளியிடவில்லை.
இதற்கிடையில், கோவில்களின் வரவு-செலவு கணக்கை தணிக்கை செய்யும் பொறுப்பை தமிழ்நாடு நிதித்துறை வசம் ஒப்படைத்து கடந்த 2021-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்காக கோவிலின் மொத்த வருமானத்தில், 4 சதவீதம் தணிக்கை கட்டணமாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
1986-ம் ஆண்டு முதல் கோவில்களின் வரவு-செலவு கணக்கில் சுமார் 10 லட்சத்து 80 ஆயிரம் ஆட்சேபனை கேள்விகள் தணிக்கையாளர்களால் கேட்டப்பட்டு, இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ளன. அதாவது, 1,549 கோடி ரூபாய் அளவுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.
அதுமட்டுமல்ல அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு கார், ஜீப் வாங்குதல், அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கழிவறை கட்டுதல், லாரி மூலம் தண்ணீர் வாங்குதல், துறை சார்ந்த கூட்டங்களுக்கு டீ, காபி, சாப்பாடு, தண்ணீர் பாட்டில் வாங்குதல் போன்ற செலவுகளை கோவில்களின் வருமானத்தில் இருந்து செய்கின்றனர்.
ஒரு கோவிலின் பக்தர், நன்கொடையாளர் ஆகியோருக்கு அந்த கோவிலின் வரவு-செலவுகளை தெரிந்துக் கொள்ள உரிமை உள்ளது.
எனவே, அனைத்து கோவில்களின் வரவு-செலவு கணக்கையும் அறநிலையத்துறை இணையதளத்தில் பி.டி.எப். வடிவில் வெளியிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சௌந்தர் ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் வரவு செலவு கணக்கை வெளியிடாததற்காக அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர், “தமிழ்நாட்டில் சுமார் 9 ஆயிரத்து 500 கோவில்களுக்கு வருமானம் இல்லை என்று அறநிலையத்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் இணை கமிஷனர் நிர்வாகத்தின் கீழ் 11 கோவில்களும், துணை கமிஷனர் நிர்வாகத்தின் கீழ் 9 கோவில்களும், உதவி கமிஷனர் நிர்வாகத்தின் கீழ் 30 கோவில்களும் உள்ளன. அதிக வருமானத்தை தரும் பழனி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இந்த 50 கோவில்களின் வரவு-செலவு கணக்கையாவது வெளியிட்டு இருக்கவேண்டும்.
தணிக்கையில் சுமார் 10 லட்சத்து 80 ஆயிரம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறுவது தீவிர குற்றச்சாட்டாகும். இத்தனைக்கும் அனைத்து கோவில் வரவு-செலவு கணக்கை வெளியிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை கமிஷனர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டு உள்ளார். அதன்பின்னரும் இதுவரை கணக்கை வெளியிடவில்லை'' என்று நீதிபதிகள் கூறினர்.
இதுகுறித்து 2 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்வதாக அறநிலையத்துறை சிறப்பு அரசு பிளீடர் என்.ஆர்.ஆர்.அருண்நடராஜன் கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அறநிலையத்துறை கமிஷனர் 2024-ம் ஆண்டு பிறப்பித்த சுற்றறிக்கை உத்தரவின்படி, எத்தனை கோவில் செயல் அலுவலர்கள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில் வரவு-செலவு கணக்கை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அதிக வருமானம் தரக்கூடிய பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட 50 கோவில்களின் வரவு-செலவு கணக்கு விவரங்களை முதலில் அறநிலையத்துறை மற்றும் கோவில் இணையதளத்தில் ஒரு மாதத்துக்குள் வெளியிட வேண்டும். சுமார் 9,500 கோவில்களின் வரவு-செலவு கணக்கு இதுவரை தணிக்கை செய்யாமல் உள்ளன. இதுகுறித்து விளக்கம் அளிக்க, இந்த வழக்கில் அறநிலையத்துறை தணிக்கை இயக்குநரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். விசாரணையை வருகிற செப்டம்பர் 18-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment