கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாஸ்தாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40). இவருக்கும் தெக்கும்பகம் பகுதியை சேர்ந்த அதுல்யா (வயது 29) என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இதனிடையே, கடந்த மாதம் 19ம் தேதி அதுல்யா சார்ஜாவில் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அதுல்யாவின் தந்தை தெக்கும்பகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், கணவர் சதீஷ் வரதட்சணை தொல்லை அளித்ததாகவும், அதுல்யாவை சதீஷ் கடுமையாக தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்படுள்ளது. இதையடுத்து, வெளிநாட்டில் இருந்த சதீசுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அதுல்யாவின் கணவர் சதீஷ் சார்ஜாவில் இருந்து இன்று காலை விமானம் மூலம் கேரளா வந்துள்ளார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த சதீசை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சதீஷ் பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து சதீசை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். அதுல்யா மரணம் தொடர்பாக சதீசிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment