பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. கட்சியில் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு, நிர்வாகிகள் நீக்கம், சேர்ப்பு என புதிய, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இருவருக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் வரும் சூழலில், பாமகவின் தலைமை அலுவலகம் என்று அன்புமணி அலுவலகத்தின் முகவரியை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருந்தது.
இது ராமதாஸ் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். ராமதாசுக்கு போட்டியாக வரும் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பை சேர்ந்த வடிவேல் ராவணன் அறிவித்தார். இருவரும் பொதுக்குழுவை அறிவித்ததால் பாமகவினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாமக பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது. ராமதாஸ் நியமித்த பாமக மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன்னைத்தானே தலைவர் என சொல்லிக் கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும், மாமல்லபுரத்தில் ஆக.9ம் தேதி நடக்கும் பாமகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, இன்று மாலை ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் நீதிமன்றத்தில் உள்ள தனது அறைக்கு வர வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இன்று மாலை 5:30 மணிக்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் நீதிமன்றத்தில் உள்ள எனது அறைக்கு வர வேண்டும். வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது. இருவரிடமும் தனித்தனியாகப் பேசப் போகிறேன். உடனடியாக ராமதாசை புறப்படச் சொல்லுங்கள். இது என்னுடைய வேண்டுகோள்” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment