புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 11 போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. இதன் 12-வது சீசன் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது.
இந்தநிலையில் புரோ கபடி தொடரின் லீக் சுற்றில், போட்டி அமைப்பாளர்கள் மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். இதன்படி லீக் சுற்று 108 ஆட்டங்களை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் 18 ஆட்டங்களில் விளையாடும். டை-பிரேக்கர் விதிமுறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களுக்கும் கோல்டன் ரைய்டும் கொண்டு வரப்படுகிறது.
இதற்கு முன்னர் கோல்டன் ரைய்டு, பிளே ஆப் சுற்றுகளில் மட்டுமே இருந்தது. இனிமேல் ஆட்டங்கள் டையில் முடிவடைந்தால் வெற்றியை தீர்மானிக்க 5 ரைய்டுகள் கொண்ட ஷூட் அவுட் நடத்தப்படும். 5 ரைய்டுகளுக்கு பிறகும் ஆட்டம் சமநிலையில் இருந்தால், கோல்டன் ரைய்டு விதி அமல்படுத்தப்படும்.
கோல்டன் ரைய்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் சமநிலையில் இருந்தால், டாஸ் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். புள்ளிகள் வழங்குவதிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். தோல்வி அடையும் அணிக்கு புள்ளிகள் கிடையாது.
No comments:
Post a Comment