மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவிலும், 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகை பெற்றவையாகவும், செயல்படுகின்றன.
சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து கட்டணம் வசூலித்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் 6 ஆயிரத்து 606 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 78 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆண்டொன்றுக்கு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, கடந்த 1992-ம்ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1-ந் தேதி விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை உள்பட பல இடங்களில் 40 சுங்கச்சாவடிகளில், 5 முதல் 10 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்தநிலையில், விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறிப்பாக விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் நள்ளிரவு முதல் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண விவரம்:-
கார், ஜீப், பயணிகள் வேன் ஆகியவற்றுக்கு மாற்றமின்றி ஒரு வழி கட்டணம் ரூ.105, பல முறை பயணிக்க புதிய கட்டணம் ரூ.160 (பழைய கட்டணம் ரூ.155), மாதாந்திர கட்டணம் ரூ.3,170 (ரூ.3,100) இலகு ரக வாகனம் ஒரு வழி கட்டணம் ரூ.185 (ரூ.180), பல முறை பயணிக்க ரூ.275 (ரூ.270), மாதாந்திர கட்டணம் ரூ.5,545 (ரூ.5,420), லாரி, பஸ் ஒரு வழி கட்டணம் ரூ.370 (ரூ.360), பல முறை பயணிக்க ரூ.555 (ரூ.540), பல அச்சு வாகனம் ஒரு வழி கட்டணம் ரூ.595 (ரூ.580), பல முறை பயணிக்க ரூ.890 (ரூ.870), மாதாந்திர கட்டணம் ரூ.17,820 (ரூ.17,425). இவ்வாறு ரூ.5 முதல் ரூ.70 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கட்டணம் எவ்வளவு உயர்வு?
மதுரை - எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணத்தில் இருந்து ஒரு முறை, இருமுறை பயணத்திற்கு ரூ.5 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. மாதாந்திர கட்டணம் ரூ.65 கூடுதல் வசூலிக்கப்படுகிறது.
இலகுரக வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல கட்டணம் உயர்த்தப்படவில்லை. இருமுறை பயணத்திற்கு ரூ.5, மாதாந்திர கட்டணம் ரூ.105 கூடுதல் வசூலிக்கப்பட உள்ளது. லாரி பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல ரூ.5 இருமுறை பயணத்திற்கு ரூ.10 கூடுதல் மாதாந்திர கட்டணம் ரூ.215 வசூலிக்கப்பட உள்ளது.
இரண்டு அச்சு, மிக கனரக வாகனங்களுக்கு ஒரு முறை ரூ.5 இருமுறை பயணத்திற்கு ரூ.20 கூடுதல் மாதாந்திர கட்டணம் ரூ.345 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment