ரஜினியின் புதிய படத்திற்கு வன்னியர் சங்கம் எதிர்ப்பு.... - MAKKAL NERAM

Breaking

Saturday, October 7, 2023

ரஜினியின் புதிய படத்திற்கு வன்னியர் சங்கம் எதிர்ப்பு....

 

நடிகர் ரஜினி, இயக்குனர் த.செ.ஞானவேல்

ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்துக்கு வன்னியர் சங்கத்தினர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பாமகவினருக்கு எதிராக ரஜினி ரசிகர்களும் திரண்டு வருகின்றனர். இணையத்தில் எழுந்திருக்கும் இந்த களேபரத்தின் பின்னணியை துழாவினால் அங்கே ரஜினியோ அவரது ரசிகர்களோ இல்லை என்ற விநோதம் பிடிபடும்.


ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. த.செ.ஞானவேல் இயக்குகிறார். தலைவர் 170 என்ற தற்காலிக தலைப்பில் இந்த திரைப்படத்துக்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் உற்சாகம் கொண்டுள்ளனர். ஆனால், வன்னியர் சங்கத்தினர் எழுப்பிய சர்ச்சையால் ரஜினி ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர்.



சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் முன்னதாக த.செ.ஞானவேல் இயக்கிய திரைப்படம் ’ஜெய்பீம்’. புரட்சிகரமான கருத்துக்களோடு சமூக விழிப்புணர்வு கதையம்சத்தோடும், காட்சிகளோடும் வெளியான ஜெய்பீம் திரைப்படத்துக்கு பெரும் வரவேற்பு எழுந்தது. வணிக ரீதியிலும் ஜெய்பீம் வெற்றி முத்திரை பதித்தது. ஆனால் ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் காட்சிகளை கொண்டிருந்ததாக கூறி த.செ.ஞானவேல் மற்றும் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் போராட்டத்தில் இறங்கினர்.



திரையரங்குகளில் காட்சிகள் ரத்து, காவல் நிலையங்களில் புகார்கள், நீதிமன்றங்களில் வழக்குகள் என தமிழகத்தை கிடுகிடுக்கச் செய்த இந்த போராட்டம் ஒருவழியாக ஓய்ந்தது. ரஜினிகாந்த் நடிப்பிலான அடுத்த திரைப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கப்போவதாக செய்திகள் வெளியானதுமே வன்னியர் சங்கத்தினர் மீண்டும் போராட்டக்கோலம் பூண்டுள்ளனர்.


அதிலும், ரஜினி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படமும், உண்மை சம்பவத்தை ஒட்டிய சமூக விழிப்புணர்வு திரைப்படமாக இருக்கும் என்ற தகவலாலும், அதிலும் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் இருக்கக்கூடும் என்ற வதந்தியாலும் பாமகவினர் உஷ்ணமானார்கள்.


இதன் எதிரொலியாக வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளரான க.வைத்தி, ‘வன்னியர் சங்கத்தை இழிவுபடுத்திய இயக்குநர் த.செ.ஞானவேல் பங்களிப்பில் உருவாகும் திரைப்படங்களை தொடர்ந்து புறக்கணிப்போம்’ என்று அறைகூவல் விடுத்தார். இதனையடுத்து இணையத்தில் தீவிரமாக களமாடும் பாமவினர், தலைவர் 170 திரைப்படத்துக்கான புறக்கணிப்பை எதிர்ப்பாக முன்னிறுத்தி வருகின்றனர். இதனால் ரஜினி ரசிகர்கள் தாமாக பாமகவினருக்கு எதிராக திரும்பியுள்ளனர்.



தலைவர் 170 திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருக்கும் ஜி.தமிழ்க்குமரன், பாமகவின் கௌரவத் தலைவராக இருக்கும் ஜி.கே.மணியின் மகன் ஆவார். தமிழ்க்குமரன் பாமகவிலும் பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில், தலைவர் 170 திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாமகவினர், லைக்கா நிறுவனத்தில் பிரதான பொறுப்பு வகிக்கும் தமிழ்க்குமரனை ராஜினாமா செய்ய வலியுறுத்துவார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.



இதற்கு பதில் அளிக்கும் வகையில், செஞ்சி தொகுதியின் பாமக முன்னாள் எம்எல்ஏவான கணேஷ்குமார், ‘எங்களுடைய எதிர்ப்பு இயக்குநர் ஞானவேலுக்கு மட்டுமே. அதே வேளையில் அவருக்கு ஆதரவாக யார் வந்தாலும் அவர்களையும் எதிர்ப்போம். அது ரஜினிகாந்தாக இருந்தாலும் சரி அல்லது லைக்கா நிறுவனமாக இருந்தாலும் சரி’ என பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் ஜி.தமிழ்க்குமரனை பொருட்படுத்தாது, தலைவர் 170 திரைப்படம் மற்றும் த.செ.ஞானவேலுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை கணேஷ்குமார் தெளிவுபடுத்தி உள்ளார்.


இதனையடுத்து, பாமகவினர் - ரஜினி ரசிகர்கள் இடையிலான மோதல், இணையத்தில் அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறது.



எங்களுடைய எதிர்ப்பு இயக்குனர் ஞானவேலுக்கு மட்டுமே ....அதேசமயம் அவருக்கு ஆதரவாக யார் வந்தாலும் அவரையும் எதிர்ப்போம் அது ரஜினிகாந்த் ஆக இருந்தாலும் சரி... லைக்கா நிறுவனமாக இருந்தாலும் சரி.. pic.twitter.com/xb6OoC2QYi

— Ganesh Kumar (@ganeshkumarmla) October 7, 2023

No comments:

Post a Comment