கொடைக்கானலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் ஓய்வு

 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. 2 கட்ட தேர்தல்களில் நாடு முழுவதிலும் இதுவரை 191 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நிறைவடைந்த நிலையில், அதற்கு முன்னதாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தேர்தல் நிறைவடைந்ததும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் ஓய்வெடுப்பதற்காக குளுமையான மலைப்பிரதேசங்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், குன்னூர் உள்ளிட்ட நகரங்களிலும், கோவை மாவட்ட வால்பாறை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சேலம் மாவட்டம் ஏற்காடு, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி, நாமக்கல் மாவட்ட கொல்லிமலை ஆகிய மலைப்பகுதிகள் அரசியல் கட்சி பிரமுகர்களின் வருகையால் களைகட்டியுள்ளது. கொடைக்கானலில் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வருகிறார். இதே போல் தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனும் கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகின்றார்.இந்நிலையில், ஏப்ரல் 29ம் தேதி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் கொடைக்கானல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 நாட்கள் அங்குள்ள தனியார் சொகுசு தங்கும் விடுதியில் அவர் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். முதல்வரின் வருகையைு அடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் இ.கா.ப., ஆகியோர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக இன்று கொடைக்கானலில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments