விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ-வாக இருந்த நா.புகழேந்தி மறைவைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிக்கு வரும் ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவும், ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.புஸ்ஸி ஆனந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவதே பிரதான இலக்கு என கட்சித் தலைவர் விஜய் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
எனவே, இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் எந்தத் தேர்தலிலும் தவெக போட்டியிடாது. வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் தவெக போட்டியிடாது. எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை. தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment