கன்னியாகுமரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை சேதம்..... போலீஸார் தீவிர விசாரணை - MAKKAL NERAM

Breaking

Tuesday, June 18, 2024

கன்னியாகுமரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை சேதம்..... போலீஸார் தீவிர விசாரணை

 

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே லாயம் விளக்கு பகுதியில் சகாய நகர் என்ற இடத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியினர், ராஜீவ் காந்தியின் பிறந்த நாள், மறைந்த நாள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளின் போது இங்கு வந்து சிலைக்கு மாலை அணிவிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இதன் அருகிலேயே டீக்கடை ஒன்றும், பிற கடைகளும் அமைந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை தேநீர் குடிப்பதற்காக பொதுமக்கள் வந்த போது, ராஜீவ் காந்தி சிலை கீழே விழுந்து சேதம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு அவர்கள் தகவல் அளித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், முதற்கட்ட விசாரணை நடத்தினர். அப்போது நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ராஜீவ் காந்தியின் சிலை சேதமடைந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இது விபத்து தானா, அல்லது மர்ம நபர்கள் யாரேனும் ராஜீவ் காந்தி சிலையை சேதப்படுத்தி விட்டு சென்றார்களா என்ற கோணத்தில் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ராஜீவ் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment