சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பேராசிரியை நிகிதா கோயிலுக்கு வந்தபோது, அவரது காரில் இருந்த நகைகள் காணாமல் போனதாக கூறப்பட்டதையடுத்து, மானாமதுரை தனிப் படை போலீசார் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது போலீசார் மேற்கொண்ட தாக்குதலால், அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட 5 தனிப் படை போலீசாரான கண்ணன், ராஜா, பிரபு, சங்கரமணிகண்டன் மற்றும் ஆனந்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிமன்ற காவலில் வைத்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். தற்போது, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், டிஎஸ்பி மோகித்குமார் தலைமையில் சிபிஐ அதிகாரிகள் நேரில் மடப்புரம் மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, சிறையில் உள்ள 5 தனிப் படை போலீசாரும் காணொளிக் காட்சி மூலம் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஜூலை 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சிபிஐ அதிகாரிகள் தற்போது இந்த 5 பேரையும் தங்களது காவலில் எடுத்து விரிவான விசாரணை நடத்த மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த வழக்கில் நீதியும், உண்மையும் வெல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.
No comments:
Post a Comment