விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி இரவு 7.25 மணி வரை நடக்க இருக்கிறது. மாநாட்டுக்கான பந்தல் அமைப்பு பணி உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் நேற்று இரவில் இருந்தே மதுரையில் குவியத் தொடங்கி உள்ளனர்.
விடியற்காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டு வருகின்றனர். தொண்டர்கள், தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றைத் தாங்களே கொண்டு வந்துள்ளனர். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், கலை நிகழ்ச்சிகள், உறுதி மொழி ஏற்பு, கொள்கை விளக்க பாடல், தீர்மானம் நிறைவேற்றம் ஆகியவற்றை தொடர்ந்து விஜய் பேசுகிறார்.
இந்த நிலையில், தவெக மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம், சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தீர்மானம், லாக்அப் மரணம், நெசவாளர்கள் விவகாரம், பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு, இலங்கை மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கவின் ஆணவக் கொலை பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அது குறித்து மாநாட்டில் விஜய் ஏதாவது பேசுவாரா? அல்லது தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment