தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல் மூலம் சரக்குகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில் துபாய் ஜெபல்அலி துறைமுகத்தில் இருந்தும், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இந்தியாவுக்கு பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
அதேநேரத்தில் வெளிநாடுகளில் இருந்து வரி ஏய்ப்பு செய்வதற்காக பல்வேறு பொருட்களை கடத்தி வரும் சம்பவங்கள் மற்றும் போதை பொருட்கள், செம்மரக்கட்டை கடத்தல் போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனால் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் துபாய் ஜெபல்அலி துறைமுகத்தில் இருந்து ஒரு சரக்கு கப்பல் கன்டெய்னர்களுடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. இதனை தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது, அந்த கப்பலில் வந்த ஒரு கன்டெய்னரில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு பேரீச்சம் பழங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த நிறுவனம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நிறுவனம் போலி என்பது தெரிய வந்தது.
உடனடியாக அதிகாரிகள் அந்த கன்டெய்னரை தனியாக எடுத்து திறந்து சோதனை நடத்தினர். அதில் முன்பகுதியில் பேரீச்சம் பழம் பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பாதி கன்டெய்னர் வரை பேரீச்சம் பழங்கள் இருந்தன. அதற்கு பின்னால் இந்தியாவில் உள்ள பிரபல நிறுவனத்தின் பெயரிலான சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதில் 1,300 பெட்டிகளில் 2 லட்சம் சிகரெட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.4 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் சிகரெட் பாக்கெட்டுகள், ரூ.60 லட்சம் மதிப்பிலான பேரீச்சம் பழம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த சிகரெட்டுகள் இந்தியாவில் உள்ள பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக லேபிள் ஒட்டி கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது. இந்த சிகரெட்டை கடத்தியவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment