தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் வருகிற 25-ந் தேதி ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருபத்தூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நள்ளிரவு முதல் சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிகாலையிலேயே மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் உயிரிழந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காலையில் வேலைக்கு சென்ற நிலையில், கண்ணகி நகரில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் வரலட்சுமி (30) உயிரிழந்தார். தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் கசிந்திருந்த நிலையில் இந்த விபரீத சம்பவம் நேரிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment