2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது நம் கடமை என பாஜகவினர் மத்தியில் பேசிய அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அதிமுக தரப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தாண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அப்போது முதல் தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும் என்று அமித்ஷா தொடர்ந்து திட்டவட்டமாக கூறி வருகிறார். அதனை வழிமொழிந்து பேசி வந்த அண்ணாமலையும், ‘2026ல் கூட்டணி ஆட்சி தான்’, ’ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ எனக் கூறி அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தார் அண்ணாமலை.
ஆனால் எடப்பாடியோ, அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்து வந்தார். இந்த மோதல் முற்றி வந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகும் என பேசப்பட்டது.
இதற்கிடையே நெல்லையில் நேற்று பாஜகவின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் முதல் மாநாடு நடைபெற்றது. அப்போது மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமித் ஷா முன்னிலையில் பேசிய அண்ணாமலை, “2026 சட்டமன்ற தேர்தலில் தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நம் ஒவ்வொருவரின் கடமை” என பேசினார்.அண்ணாமலையின் இந்த பேச்சு அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த அதிமுகவினர், ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டுமென பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்’ என தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment