திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 9-ம் நாளான வருகிற 26-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. முந்தைய காலங்களில் இந்த தேரோட்டத்தில் பெரிய தேரில் கற்பகவிநாயகரும், சிறிய சப்பர தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி வீதி உலா வருவார்கள்.
குறிப்பாக சண்டிகேஸ்வரர் தேரை முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இழுத்து வருவார்கள். இதையடுத்து இந்தாண்டு சண்டிகேஸ்வரருக்கு புதிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டு ரூ.25 லட்சத்தில் புதிய தேர் செய்யப்பட்டது. இந்த புதிய தேரின் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.
முன்னதாக கோவிலின் கிழக்கு கோபுரம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த புதிய தேர் முழுவதும் மாலை அணிவிக்கப்பட்டு நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டு 9 குடங்களில் கொண்டு வந்த புனிதநீரை சிவாச்சாரியார்கள் தேர் மீது ஊற்றி சிறப்பு தீபாராதனை காண்பித்தனர்.
தொடர்ந்து காலை 9.20 மணிக்கு கோவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி சித.பழனியப்பச்செட்டியார், நச்சாத்துப்பட்டி குமரப்பச் செட்டியார் ஆகியோர் தலைமையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டம் நடைபெற்றது. தேர் கோவிலை சுற்றி வீதி உலா வந்து காலை 10.15 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் அங்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி 3-வது நாளையொட்டி நேற்று காலை கற்பக விநாயகர் சிறப்பு அலங்காரத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நேற்று இரவு பூத வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.
No comments:
Post a Comment