சிவகாசி: பட்டாசு உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல் - MAKKAL NERAM

Breaking

Friday, August 8, 2025

சிவகாசி: பட்டாசு உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல்


 அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.


அந்த பயணத்தில் இன்று சிவகாசியில் அச்சக உரிமையாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், காலண்டர் தயாரிப்பாளர்கள், மற்றும் வணிகர் சங்கத்தினருடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’பட்டாசு தொழில் நடத்துவதில் இருக்கும் சிரமத்தையும், பிரச்னைகளையும் சொன்னார்கள். இந்த நெருக்கடியான சூழலிலும் பட்டாசு தொழிலில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். வெளிநாட்டுக்கு பட்டாசு ஏற்றுமதியாகி அரசுக்கு வருமானம் வருகிறது ஒரு சிலர் பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த காரணத்தால்தான் இந்த பிரச்சினை வெடித்தது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அரசாங்கம் குறிப்பிட்ட அளவு மட்டுமே செயல்படும் நிலை உள்ளது. இந்த வழக்கு நடக்கும்போதே இதற்கு தீர்வுகாண அதிமுக ஆட்சியில் சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளை சந்தித்து பிரச்சினைகளை சொல்லி, கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாட வைத்தோம்.


இருந்தாலும் தீபாவளி காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு வரும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. சுப்ரீம் கோர்ட்டு மாசுக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பொதுநல வழக்கை போட்டவர்களுக்கு சாதகமாகி விடுகிறது. நம் மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவில் ஏற்படும் நிலைகளை எடுத்துச் சொல்லித்தான் இதற்கு தீர்வுகாண முடியும்.


அதிமுகவைப் பொறுத்த வரையில், எல்லா தொழிலுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். உங்கள் பிரச்சினைகளை மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலம் எடுத்துச் சொல்வோம். மத்திய மந்திரிகளை சந்தித்தும் உங்கள் பிரச்னைகளை சொல்லி உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்.அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழில் சிறக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பட்டாசு தொழிலாளர்கள் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிவகாசியில் 10 கோடி ரூபாயில் தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்ட்து. மதுரை அரசு மருத்துவமனையிலும் இது தொடங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் பிரம்மாண்டமான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் கொண்டு வந்திருக்கிறோம். அடுத்து ஆட்சிக்கு வந்ததும் உங்களுடைய குறைகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், காமராஜ், கே.டி ராஜேந்திரபாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment