பள்ளிக்கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - MAKKAL NERAM

Breaking

Friday, August 8, 2025

பள்ளிக்கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 


தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்டறிந்து, கல்விக் கொள்கையை இந்த குழுவினர் வடிவமைத்தனர்.


மாநில கல்விக் கொள்கைக்கான 650 பக்க வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. 2024 ஜூலை 1-ம் தேதி தமிழக அரசிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.


இந்நிலையில், முதல்கட்டமாக பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் இன்று வெளியிட்டார். பள்ளி படிப்பு முதல் பட்டப் படிப்பு வரை தாய்மொழி வழியிலான கல்வி அவசியம் என குழு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், “மாநில கல்விக் கொள்கை அறிக்கையானது உயர்கல்வி, பள்ளிக்கல்வி என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பள்ளிக்கல்விக்கான அறிக்கையை முதல்-அமைச்சர் வெளியிடுகிறார். இதில் சாத்தியம் உள்ள திட்டங்கள் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்திருந்தனர்.

No comments:

Post a Comment